தி.மு.க. பிரமுகர் காரை உடைத்து கைவரிசை: பாளையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 17 லட்சம் ஆந்திராவில் மீட்பு
- கடந்த 4 நாட்களுக்கு முன்பு தி.மு.க. பிரமுகரின் காரை உடைத்து ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்தவர்கள் ஆந்திர கும்பல் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
- கொள்ளையர்கள் சித்தூர் காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி சென்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜாநகரை சேர்ந்தவர் பரமசிவ அய்யப்பன். தி.மு.க. பிரமுகர். இவரது கார் டிரைவராக பணியாற்றி வருபவர் பாளை தியாகராஜநகரை சேர்ந்த துரை (வயது40).
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பரமசிவ அய்யப்பன் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 17 லட்சம் ரூபாயை எடுத்து வருமாறு கார் டிரைவர் துரையிடம் கூறினார்.
அதன்படி அவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு சமாதானபுரம் எஸ்.பி. அலுவலகம் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்மகும்பல் அவரது கார் கண்ணாடியை உடைத்து ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது.
இது தொடர்பாக பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் ஆகியோர் தலைமையில்2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படைகள் சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராவை கைப்பற்றி அதில் இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவ பகுதியில் அதிகநேரம் செல்போன் பேசியவர்கள் தகவலும் சேகரிக்கப்பட்டது.
அப்போது கொள்ளையில் ஈடுபட்டது ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் (65) மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர். அங்கு கொள்ளை கும்பல் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
அப்போது சுப்பிரமணியன் தனது கூட்டாளிகள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று கொண்டிருந்தார். அவர்களை தனிப்படையினர் விரட்டி சென்றனர்.
இதையறிந்த கொள்ளையர்கள் சித்தூர் காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி சென்றனர்.
அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனையிட்ட போது அதில் ரூ. 17 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரூ. 17 லட்சம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த தனிப்படையினர் அதனை நெல்லை கொண்டு வந்தனர். தொடர்ந்து கொள்ளை கும்பலை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.