தஞ்சையில், பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
- 1 கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது.
- முல்லை கிலோ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1500-க்கு விற்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. இந்த சந்தைக்கு தமிழகத்தின் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பூக்கள் கொண்டுவரப்படும்.
இதே போல் இங்கிருந்தும் வெளி மாவட்டங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். பூக்களின் விலை அவ்வப்போது ஏற்றம் இறக்கத்துடன் காணப்படும்.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாலும், அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக மல்லிகை பூக்களின் மொட்டுக்கள் கடும் பனியால் செடியிலேயே கருகி உள்ளது. பூக்களின் விளைச்சல் பாதிப்பால் தஞ்சை பூச்சந்தைக்கு பூக்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1 கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இன்று இரண்டு மடங்கு அதிகரித்து கிலோ ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் முல்லை கிலோ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1500-க்கு விற்கப்பட்டது.
இது குறித்து வியாபாரி சந்திரசேகரன் கூறும்போது, தற்போது கடும் பனி நிலவி வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. மேலும் நாளை வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகம் உள்ளது . இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது என்றார்.