தஞ்சையில், தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை
- இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.140 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- வழக்கத்தை விட குறைவான அளவிலே தக்காளி லோடுகள் வருகின்றன.
தஞ்சாவூர்:
நாடு முழுவதும் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தில் காணப்படுகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாகவே ஏறுமுகத்தில் தக்காளியின் விலை உள்ளது. இடையில் சற்று விலை குறைந்தது. இதனால் தக்காளி விலை படிப்படியாக குறையும் என எண்ணி பொதுமக்கள் தக்காளிகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.
இருந்தாலும் அந்த விலை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் தற்போது தக்காளி விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.140 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.100-க்கு தக்காளி விற்கப்பட்டது. ஆனால் தற்போது கிலோவுக்கு ரூ.40 வரை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் வழக்கத்தை விட குறைந்த அளவிலேயே தக்காளிகளை வாங்கி செல்கின்றன. சமையலில் தக்காளிக்கு பதில் வேறு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளை பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.
தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வரும் தக்காளியின் விலை உயர்வு இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும்போது :-
வெளியூரில் இருந்து தஞ்சைக்கு வழக்கத்தை விட குறைவான அளவிலே தக்காளி லோடுகள் வருகின்றன. விளைச்சல் பாதிப்பால் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. தொடர்ந்து வரத்து இதேபோல் குறைந்தால் தக்காளி விலை இதைவிட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் விளைச்சல் அதிகரித்து வரத்தும் அதிகரித்தால் மட்டுமே தக்காளியின் விலை குறையும் என்றனர்.