திருவாரூரில், தொடர் மழையால் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
- 100 சதவீத காப்பீட்டு தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- நெல்மணிகள் வயலில் கொட்டி மீண்டும் முளைக்கக்கூடிய அவல நிலை ஏற்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்து வந்தது. குறிப்பாக திருவாரூர், சேந்தமங்கலம், மாங்குடி, வடகரை, வண்டம்பாலை, நன்னிலம், குடவாசல், பேரளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 1லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளன.
நேற்று காலையில் இருந்து மாலை வரை அதிகமழை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் நிம்மதி பெரு மூச்சுவிட்ட நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக விவசாயிகள் மேலும் கலக்கமடைந்துள்ளனர்.
ஏற்கனவே மழை நீரில் சாய்ந்துள்ள நெற்பயிர்கள் தொடர் மழையின் காரணமாக நெல்மணிகள் வயலில் கொட்டி மீண்டும் முளைக்கக்கூடிய அவல நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நி லையில் மாவட்ட முழுவதும் வருவாய்த்துறையினர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
உடனடியாக வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்து பாதிப்புகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்.
100 சதவீத காப்பீட்டு தொகை கிடைப்பதற்கு முன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.