உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நூற்றாண்டு விழா நினைவு தூண் அமைப்பு
- அரசுநூற்றாண்டு விழா சிறப்பு நிதியாக 48.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
- பூங்கா உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படும்.
உடுமலை :
உடுமலை நகராட்சி 1918 ஜனவரி 1ல், மூன்றாம் நிலை நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டு 1970ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1979ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 1984ம் ஆண்டு முதல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு,100ஆண்டுகளை கடத்துள்ளது.
நகராட்சியாக 104 ஆண்டுகளான நிலையில், நூற்றாண்டு நினைவாக உட்கட்டமைப்பு மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் கடந்தாண்டு, அரசுநூற்றாண்டு விழா சிறப்பு நிதியாக 48.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.இந்நிதியின் கீழ் ரூ. 3.75 கோடி செலவில், பஸ் நிலையம் விரிவாக்கம், 12.97 கோடி ரூபாய் செலவில் தங்கம்மாள் ஓடை பகுதியில் நடை பாதை மற்றும் தடுப்புச்சுவர், ரூ.15.98 கோடி செலவில் கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில்மழை நீர் வடிகால், சந்தை வளாகம், பூங்கா புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நகராட்சி புதிய அலுவலகத்தில், உட் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும், நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நூற்றாண்டு நினைவுத்தூண் அமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அதன் அடிப்படையில் தற்போது நகராட்சி அலுவலகம் முன் அழகாக வடிவமைக்கப்பட்ட நினைவு தூண் நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து சுற்றிலும் பூங்கா உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.