உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2024-07-28 04:28 GMT   |   Update On 2024-07-28 04:28 GMT
  • தென்மேற்கு பருவமழை கொட்டி வருகிறது.
  • கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, மடிக்கேரி, மைசூரு, மாண்டியா மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டுகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதில் கர்நாடகம் மற்றும் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி ஆற்றின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை தனது முழுகொள்ளவை எட்டிவிட்டது.

கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி உயரம் ஆகும். தற்ேபாது 123.34 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

அதன்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நேற்று 1 லட்சத்து 31 ஆயிரத்து 234 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து இன்று 1 லட்சத்து 30 ஆயிரத்து 867 கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சீறிப்பாய்ந்தபடி காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.

அதே போல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே 84 அடி நீர்மட்டம் உயரம் உள்ள கபினி அணை கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே தனது முழுகொள்ளளவையும் எட்டிவிட்டது. இந்த அணையில் 82.05 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அணைக்கு 32 ஆயிரத்து 867 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 35 ஆயிரம் கன அடி நீர் கபிலா ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபிலா ஆற்று தண்ணீர் டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு பகுதியில் காவிரியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வருகிறது.

இன்று காலை 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரத்து 867 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டபடி தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நீரானது தமிழக-கர்நாடகா எல்லையான பிலிகுண்டு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று இரவு 1 லட்சத்து 41 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

தொடர்ந்து ஒகேனக்கல்லில் இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள பெருக்கு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகள் தெரியாத வகையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

மேலும் காவிரி ஆற்றங்கரையோரமுள்ள பகுதிகளான முதலை பண்ணை, சத்திரம், நாகர்கோவில், ஊட்டமலை, தளவகாடு ஆகிய பகுதிகளில் கரைகளை தொட்டு சென்று தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. இந்த பகுதிகளில் தண்ணீர் வீடுகளில் சூழ்ந்து காணப்படுவதால், அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாற்று இடம் செல்ல முடியாதவர்களை ஒகேனக்கல்லில் உள்ள தனியார் மண்டபங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் தடை நீடித்து வருகிறது. மேலும் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகளை போலீசார் சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அணைக்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று மதியம் 1 லட்சத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நேற்று 71-வது முறையாக 100 அடியை எட்டியது.

நேற்று இரவு 1 லட்சத்து 23 ஆயிரத்து 184 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 115 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 107.69 அடியாக உயர்ந்தது. நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் அணையில் தண்ணீர் கடல் போல காட்சி அளிக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழாவை (ஆடி 18) மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு இதுவரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் வருகிற 3-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்று மேட்டூர் அணையில் இருந்து ஆடிப்பெருக்குக்காக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1.65 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் கிருஷ்ணகிரி (பிலிகுண்டு), தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்ட கலெக்டர்களிடம் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் காவிரி கரையோர பகுதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதன்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வருவாய்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் காரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News