உள்ளூர் செய்திகள்

நீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலம் அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை

Published On 2024-06-25 05:14 GMT   |   Update On 2024-06-25 05:14 GMT
  • குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
  • சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி, செங்கோட்டை, புளியரை, மேலகரம், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்தது.

மலைப்பகுதிகளிலும் மழை பெய்ததன் காரணமாக குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அபாய ஒலி எழுப்பப்பட்டு மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இன்று காலையில் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் அங்கு தண்ணீர் மேலும் அதிகரித்ததால் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் உடனடியாக அப்புறப்படுத்தப் பட்டனர்.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிற்றருவி மற்றும் புலியருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பிரதான அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். 

Tags:    

Similar News