உள்ளூர் செய்திகள்

களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு: மணிமுத்தாறில் குளிக்க தடை

Published On 2024-11-15 05:49 GMT   |   Update On 2024-11-15 05:49 GMT

நெல்லை:

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை வனப்பகுதி இந்தியாவிலேயே அதிகம் மழைப்பொழிவு பெறும் வனப்பகுதியாகும். இங்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் மழை நீடித்தது.

நேற்றும் பகலில் தொடங்கி இன்று காலை வரையிலும் நாலுமுக்கு, ஊத்து பகுதியில் பலத்த மழை பெய்தது. காக்காச்சி பகுதியில் பரவலாக மழை பெய்தது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 10.1 சென்டிமீட்டரும், நாலுமுக்கில் 9.6 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

இதேபோல் மாஞ்சோலை, காக்காச்சி தேயிலை தோட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலையில் 8 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நேற்று மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றும் அங்கு மழை பெய்து வருவதால் 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை வனத்துறை நீட்டித்துள்ளது.

களக்காடு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News