கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு - நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
- இதனால் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தர்மபுரி:
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனால் இந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவான 124 அடியில் தற்போது 100 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 48 ஆயிரத்து 25 கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 2,680 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கபினி அணை தனது மொத்த கொள்ளளவான 84 அடியில் தற்போது 80 அடியை எட்டி உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரத்து 896 கனஅடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து பாதுகாப்பு கருதி வினாடிக்கு 11,250 கனஅடி தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 13 ஆயிரத்து 930 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று ஒகேனக்கல்லை வந்தடைந்தது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.
அதன்படி நேற்று மாலை 7 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.