பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: அரசு விரைவு பஸ்கள்-ரெயில்களில் டிக்கெட் கிடைக்காமல் அவதி
- வழக்கமாக அரசு விரைவு பஸ்களில் தினசரி 10 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும்.
- தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.
சென்னை:
பஸ் மற்றும் ரெயில்களில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மட்டும்தான் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். பலர் டிக்கெட் கிடைக்காமல் திண்டாடுவார்கள்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தினமும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
வழக்கமாக அரசு விரைவு பஸ்களில் தினசரி 10 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும். ஆனால் இப்போது 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 36 ஆயிரம் டிக்கெட்டுகள் மாநிலம் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து தினமும் 450 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் அடுத்த சில நாட்களுக்கு டிக்கெட்டுகள் இல்லை. வார இறுதி நாட்கள், முகூர்த்த தினங்களில் வழக்கமாக 1.2 லட்சம் பயணிகள் அரசு பஸ்களிலும், விரைவு பஸ்களிலும் பயணிப்பார்கள். தற்போது அது 1.3 முதல் 1.5 லட்சம் வரை உயர்ந்துள்ளது. பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்பாராத வகையில் பயணிகள் கூட்டம் அதிகமாக வருவதால் அதை சமாளிக்க சென்னை மட்டுமின்றி விழுப்புரம், கும்பகோணம் கோட்டங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதேநேரம் ஆம்னி பஸ்களில் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூல் வேட்டை நடத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து கோவை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர் ஆகிய வழித்தடங்களில் கட்டணம் தாறுமாறாக வசூலிக்கப்படுகிறது. அரசு பஸ்களில் திருச்செந்தூருக்கு ரூ.620. ஆம்னி பஸ்களில் ரூ.2000. நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்கள் கட்டணம் ரூ.1500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. அடுத்த மாதம் 10-ந் தேதி வரை எந்த ரெயிலிலும் இடம் இல்லை. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டே பயணிக்கிறார்கள்.
நெல்லை, கன்னியாகுமரி ரெயில்களில் கூடுதலாக ஒன்றிரண்டு பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் கூறுகிறார்கள்.
கூட்ட நெரிசல் காரணமாக தென்னக ரெயில்வே தாம்பரம்-நாகர்கோவில், தாம்பரம்-நெல்லை, தாம்பரம்-செங்கோட்டை, சென்னை-கன்னியாகுமரி சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.