உள்ளூர் செய்திகள்

சென்னை கோட்டையில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2024-08-11 05:05 GMT   |   Update On 2024-08-11 05:05 GMT
  • தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
  • சென்னை முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக அரசு சார்பில் வருகிற 15-ந்தேதி 78-வது சுதந்திர தினவிழா கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினவிழா பேருரை ஆற்றுகிறார்.

வீர-தீர செயல் புரிந்த வர்களுக்கு விருது மற்றும் பதக்கங்களையும் வழங்கு கிறார். இந்த விழாவுக்கு வருகை தரும், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்காக புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிர்புறம் உள்ள பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

சுதந்திர தினவிழாவில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க் கள், உயர் அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இரவு-பகலாக இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தலைமை செயலக பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

இதையொட்டி சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியும் கோட்டை கொத்தளத்தில் நடத்தி பார்க்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சுதந்திர தினத்தன்று முதலமைச்சரை மோட்டார் சைக்கிள் புடைசூழ காவல்துறை வாகன அணிவகுப்புடன் அழைத்து வருவது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

வெள்ளை நிற போலீஸ் திறந்த ஜீப்பில் ஒருவரை நிறுத்தி அணிவகுப்புகளை பார்வையிடுவது போன்றும், குதிரைப்படை, கமாண்டோ படை, ஆயுதப்படை உள்ளிட்ட 7 படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை பெற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றுவது போன்றும் ஒத்திகை நடத்தி பார்க்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கோட்டை கொத்தளத்தில் விருதுகள், பதக்கங்கள் வழங்குவது போன்றும் ஒத்திகை நடத்திப் பார்க்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News