உள்ளூர் செய்திகள்

நாகை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும்

Published On 2023-03-25 09:14 GMT   |   Update On 2023-03-25 09:14 GMT
  • விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட் என்பதை சிவசேனா வரவேற்கிறது.
  • அரிசி, கேழ்வரகு, பருப்பு உள்ளிட்டவைகளை இந்து அறநிலையத்துறை மூலம் வழங்க வேண்டும்.

நாகப்பட்டினம்:

சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மாநில முதன்மைச் செயலாளர் சுந்தர வடிவேலன் ஆகியோர் நாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் விவசாயிகள் எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாததால் விவசாய பட்ஜெட் ஏமாற்றம் அளித்துள்ளது. விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட் என்பதை சிவசேனா வரவேற்கிறது.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை அரசு மேம்படுத்த வேண்டும். சட்டசபையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் கருத்துக்கள் சொல்ல உரிமை உள்ளது.

அதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. நாகை மாவட்டம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.

மீன்பிடித்தொழிலை தவிர வேறு எதுவும் இல்லாததால், மக்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலை உருவாகி உள்ளது.

எனவே தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆடி மாதம் கோயில்களில் நடைபெறும் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இந்துக்களுக்கு எதிரானவர் அல்ல என்ற புரிதலை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

ஆடி மாதம் கோயில்களில் கூழ் ஊற்றும் வகையில், அதற்கு தேவையான அரிசி, கேழ்வரகு, பருப்பு உள்ளிட்டவைகளை இந்து அறநிலையத்துறை மூலம் வழங்க வேண்டும்.

இது குறித்து சிவசேனா கட்சி சார்பில் இந்து அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின் போது மாநில இளைஞரணி செயலாளர் விஜய் உடன் இருந்தார்.

Tags:    

Similar News