வெங்காயதாமரை செடிகளை அகற்ற வலியுறுத்தல்
- ஆறு, குளங்களில் கழிவுநீரை விடுவதால் அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து விட்டது.
- மீண்டும் உற்பத்தியாகிவிடும் .மூன்று மாதங்களுக்கு தொடந்து தூய்மை செய்ய வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால், குளங்களில் வெங்காய தாமரைகளைச்செடி ஆக்கிரமித்து நீர்நிலைகளையும், மீன்வளத்தையும், சுற்றுசூழலையும் பெருமளவில் பாதிக்கிறது. முன்பு கழிவு நீரில் மட்டுமே வளர்ந்த இந்த செடிகள்.
தற்போது ஆறு, குளங்களில் கழிவுநீரை விடுவதால் அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து விட்டது.
இதனால் பாசன மதகுகளில் அடைத்துக்கொண்டு பாசனத்திற்கு பெரிய இடையூராக உள்ளது.
நீர் நிலைகளை இடைவெளி இல்லாமல் மூடிவிடுவதால் ஆக்ஸிஜன் குறைந்து நன்னீர் மீன் இனங்கள் உட்பட அனைத்து நீர்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகிறது.
இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, கோடைகாலங்களில் மக்களும், கால்நடைகளும் பயன்படுத்த முடியாமல் நீரை ஆவியாக்கிவிடுகிறது.
எனவே மாவட்ட அளவில் வெங்காய தாமரை அகற்றும் பணியை மக்கள் இயக்கமாக மேற்கொள்ள வேண்டும்.
ஒரு செடி கிடந்தாலும் மீண்டும் உற்பத்தியாகிவிடும் .மூன்று மாதங்களுக்கு தொடந்து தூய்மை செய்ய வேண்டும்.
இச்செடிகளை ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் செயல்படும் நுண்ணுரம் தயாரிப்பு மையங்கள் மூலமும், அல்லது நிழலான பகுதிகளில் மூடாக்கு அமைத்து பஞ்சகவ்யா மூலம் எளிதாக மக்க வைத்து விவசாயிகளுக்கு வழங்க முடியும். எனவே தனி கவனம் எடுத்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.