சத்தியமங்கலம்-கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு
- பானிபூரி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
- 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படியும், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் அறிவுறுத்தலின் படியும், சத்தியமங்கலம் நகர பகுதியில் உள்ள பானிபூரி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வில் அசைவ ஓட்டல்களில் செயற்கை வண்ணம் கலந்து சில்லி சிக்கன் தயாரித்து விற்பனை செய்த 2 கடைகள் கண்டறியப்பட்டு ஆயிரம் ரூபாய் வீதம் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் சில்லி புரோட்டா தயாரிப்புக்கு பழைய புரோட்டாவை பயன்படுத்திய ஒரு ஓட்டல் உரிமையாளருக்கு ரூபாய் ஆயிரம் அபராதமும், அஜினோமோட்டோ பயன்படுத்திய ஒரு கடைக்காரருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தமாக ரூ.4000 அபராதம் விதிக்கப்பட்டது.
கோபிசெட்டபாளையம் நகர பகுதியில் உள்ள அசைவ உணவகங்கள், பேக்கரி கடைகள் மற்றும் பானி பூரி கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது
ஆய்வில் சுகாதாரம் இல்லாத 2 கடைகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு கிடைக்கும் தலா ரூ.1000 வீதம் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பஜ்ஜி போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களை நியூஸ் பேப்பரில் வைத்து உண்பதற்கு கொடுத்த 2 கடைகளுக்கு ரூ.1000 வீதம் 2 கடைகளுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் எனவும், பானி பூரி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் தரமான பானி பூரியை பயன்படுத்த வேண்டும் எனவும் பானி பூரி ரசத்தில் செயற்கை வண்ணம் ஏதும் சேர்க்கக் கூடாது எனவும், உணவு பாதுகாப்பு உரிமம் பானி பூரி கடைக்காரர்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும், முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வில் சத்தியமங்கலம் நகரம் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம், கோபி நகரம் உணவு பாதுகாப்பு அலுவலர் குழந்தைவேல் மற்றும் புஞ்சை புளியம்பட்டி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.