மலர் அங்காடிகளில் பெயர் பலகையை தமிழில் அமைக்கும் பணி
- அங்காடிகளில் பெயர் பலகையை தமிழில் அமைக்கும் பணியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார்.
- பின்னர் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.
தருமபுரி,
தமிழ்நாட்டில் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக தமிழைத்தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயணத்தையும், அதன் தொடர்ச்சியாக தமிழைக் காப்பதற்காக அரசுக்கும், வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாட்டிலுள்ள நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழை முதன்மைப்படுத்தி அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின் படி, தமிழை முதன்மைப்படுத்தி பெயர்ப் பலகைகளை அமைக்க வேண்டும் என்று தருமபுரி வணிக நிறுவனங்களிடம் வலியுறுத்திய நிலையில், தருமபுரி நகர பேருந்து நிலையத்திலுள்ள மலர் அங்காடிகளில் பெயர் பலகையை தமிழில் அமைக்கும் பணியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார்.
பின்னர் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். அப்போது பேசிய அவர், தருமபுரி நகரத்தில் முதல் பெயர் பலகை தமிழில் முதன்மைப்படுத்தி வைக்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது.
அடுத்தகட்டமாக மாவட்டத்திலுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்க தொடர்ச்சியாக வலியுறுத்தப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிமோகன், பா.ம.க மாநில துணைத்தலைவர் சாந்த மூர்த்தி, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பால கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.