உள்ளூர் செய்திகள்

திருவாரூர் பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரம்

Published On 2023-04-14 09:40 GMT   |   Update On 2023-04-14 09:40 GMT
  • ஆரம்பத்தில் குறைவான விவசாயிகளே பருத்தி சாகுபடி பணிகளை செய்து வந்தனர்
  • அதில் ஏற்பட்ட நஷ்டத்தை பொருட்படுத்தமால் வயல்களில் மறு உழவு செய்து மீண்டும் பருத்தி சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள விவசாயிகள், ஒவ்வொரு ஆண்டும், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதும், சம்பா மற்றும் குறுவை, தாளடி நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் பிறகு உளுந்து பயறு மற்றும் வரப்பு உளுந்து சாகுபடிகளை செய்து வருகின்றனர்.

இத்தகைய சாகுபடி பணிகளுக்கு பிறகு, மாற்று பயிராக பருத்தி சாகுபடி பணிகளை கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர்.

என்றாலும், ஆரம்பத்தில் குறைவான விவசாயிகளே பருத்தி சாகுபடி பணிகளை செய்து வந்தனர். ஆனால், கடந்த ஆண்டு முதல் அதிகளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

அதேபோல, நடப்பு ஆண்டில் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி விவசாயிகள், வயல்களில் பருத்தி பயிர்கள் இட்டனர்.

அப்போது, சிறு பயிர்களாக பருத்தி பயிர்கள் இருந்த போது, பருவம் தவறிய மழையால், அவைகள் சேதமாயின.

அதில் ஏற்பட்ட நஷ்டத்தை பொருட்படுத்தமால் வயல்களில் மறு உழவு செய்து மீண்டும் பருத்தி சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

தற்போது, பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் எந்திரம் மூலம் பாத்திகட்டும் பணிகள் மற்றும் களைகள் அகற்றும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அப்பகுதி விவசாயிகள் பருத்தி சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News