உள்ளூர் செய்திகள்

மெரினாவில் தலையில் காயத்துடன் போதையில் போலீசாரிடம் வாலிபர் ரகளை

Published On 2024-06-16 07:24 GMT   |   Update On 2024-06-16 07:24 GMT
  • போதையில் ஒரு உணவகத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
  • நீண்ட நேரமாக போலீசாருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.

சென்னை:

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே நேற்று நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மதுபோதையில் தலையில் ரத்தக்காயங்களுடன் வந்த வாலிபர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து தொந்தரவு செய்தார்.

அவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் மது போதையில் நிதானமற்ற வகையில் காணப்பட்டார். போதையில் வரும் வழியில் ஒரு உணவகத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த வாலிபருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.

அவர் சீருடையில் இருந்த போலீசாரிடம் சென்று, தன்னை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். எனவே உடனடியாக போலீசாரை இங்கு வரச்சொல்லுங்கள் என்று கூறி அதிரடி காட்டினார். இதனால் போலீசார் அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் தலையில் ரத்தக்காயத்துடன் இருந்த அந்த வாலிபரை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து நீண்ட நேரமாக போலீசாருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.

மேலும் போலீசாரை அவர் ஒருமையிலும் பேசினார். பின்னர் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு அந்த நபரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பெறாமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த வாலிபர் யார் என்பது குறித்தும், அந்த வாலிபருக்கு தலையில் எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News