ஐ.எஸ்.ஐ., தரம் வாய்ந்த வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்த வேண்டும், இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அறிவுறுத்தல்
- கடைகளில் விற்கும் பொருட்களில், ஐ.எஸ்.ஐ., முத்திரை இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும்.
- போலியான முத்திரை என கண்டறிந்து உரிய ரசீதுடன் புகார் செய்யலாம்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு மற்றும் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் கடைகளில் ஆய்வு நடத்தினர்.
மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், பறக்கும்படை தனி தாசில்தார் முருகன், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் (கோவை) நவீன் ஆகியோர், எலக்ட்ரிக்கல் கடைகள், ெஹல்மெட் கடைகள், குக்கர் கடைகள், வீட்டு உபயோக கடைகளில் ஆய்வு நடத்தினர்.மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் 25 கடைகளில், ஆய்வு நடத்தி, ஐ.எஸ்.ஐ., தரம் வாய்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்தனர். அத்துடன், வாடிக்கையாளருக்கு ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடைகளில் விற்கும் பொருட்களில், ஐ.எஸ்.ஐ., முத்திரை இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும். போலியான ஐ.எஸ்.ஐ., முத்திரை செய்தும் விற்க வாய்ப்புள்ளதால், முழுமையாக சரிபார்க்க வேண்டும்.BIS- care என்ற செல்போன் ஆப்பை பதிவிறக்கம் செய்து, பொருளில் உள்ள ஐ.எஸ்.ஐ., நம்பரை பதிவு செய்தால், தயாரிப்பு நிறுவனம், தேதி, தரம் போன்ற அனைத்து விவரமும் கிடைக்கும்.இதுபோன்ற விவரம் எதுவும் கிடைக்காதபட்சத்தில், அது போலியான முத்திரை என கண்டறிந்து உரிய ரசீதுடன் புகார் செய்யலாம் எனஅதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.