உள்ளூர் செய்திகள் (District)

திராவிட அடையாளத்தை எதிர்ப்பது சரியானது அல்ல- தொல். திருமாவளவன்

Published On 2024-10-25 05:23 GMT   |   Update On 2024-10-25 05:23 GMT
  • தி.மு.க. எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது வேறு ஆகும்.
  • சீமான் தமிழர், திராவிடர் என்று பாகுபடுத்தி சொல்வது சரியான விவாதம் இல்லை.

திருவோணம்:

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி உஞ்சிய விடுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளராக இருந்த உஞ்சைஅரசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க., கூட்டணியில் விரிசல் வர வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் எதிர்பார்பாகவும், வேட்கையாகவும் இருக்கலாம். அவரின் வேட்கை தணிய வேண்டும்.

கூட்டணி கட்சிகளுக்கு இடையில் பிரச்சனையின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெறலாம். ஆனால் விரிசல் ஏற்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதை வி.சி.க. வழிமொழிகிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடம் என்ற ஒன்று இல்லை என்று கூறியிருப்பது குறித்து பலமுறை விளக்கம் அளித்திருக்கிறோம்.

திராவிடர் வேறு தமிழர் வேறு என்பது போல ஒரு விவாதத்தை கூர்மைப்படுத்துவது சங்பரிவார்களுக்கு துணை போவதாக அமையும்.

இதை தமிழக கவர்னர் ஆர்.என். ரவியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் விரும்புகிறார்கள். இதை பா.ஜனதா அரசியலாக்கி வருகிறது. அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கு துணை போகிற வகையில் சீமான் போன்றவர்களின் விவாதங்கள் அமைந்திருக்கிறது.

தி.மு.க. எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது வேறு ஆகும். ஆரியம் என்பதற்கான நேர் எதிரான கருத்தியலை கொண்டது திராவிடம் ஆகும். இதன் அடிப்படையில் தான் திராவிட அரசியலை கையாளுகிறோம். ஆனால், சீமான் தேசிய இனத்தின் அடிப்படையில் தமிழர், திராவிடர் என்று பாகுபடுத்தி சொல்வது சரியான விவாதம் இல்லை.

தி.மு.க.வை எதிர்க்கிறோம் என்ற அடிப்படையில் ஒட்டு மொத்த திராவிட அடையாளத்தையும் எதிர்ப்பது சரியானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News