கடையநல்லூரில் இரவு முழுவதும் பெய்த மழை: கால்வாயில் அடைப்பால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - பாலத்தை உயர்த்தி கட்ட கோரிக்கை
- சீவலான் கால்வாய் மேற்கு பகுதியில் கரையில் உடைப்பு ஏற்பட்டு மதீனா நகர் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது.
- உடனே நகராட்சி ஆணையாளர் சுகந்தி தலைமையிலான பணியாளர்கள் பாலத்தில் அடைப்பு ஏற்பட்ட அமலைச் செடிகளை அப்புறப்படுத்தினர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் கனமழை பெய்ய தொடங்கியது. கடந்த வாரம் கருப்பாநதி அணை நிரம்பிய நிலையில் நேற்று இரவு அணையில் இருந்து 350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கடையநல்லூர் நகரில் ஓடக்கூடிய பாப்பான்கால்வாய் மற்றும் சீவலான் கால்வாய் கரையோர பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, நேற்று இரவு நகராட்சி சார்பில் குடியிருப்பு வாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இரவு முழுவதும் பெய்த மலையால், சீவலான் கால்வாயில் நள்ளிரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குறுகலான சிறிய பாலத்தில் அமலைச் செடிகள், மலைப் பகுதிகளில் இருந்து இழுத்துவரப்பட்ட மரத்தடிகள் ஆகியவை பாலத்தின் கீழ் நீர் செல்லும் கண்வாய்களில் அடைத்துக் கொண்டது.
இதனால் சீவலான் கால்வாய் மேற்கு பகுதியில் கரையில் உடைப்பு ஏற்பட்டு மதீனா நகர் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் சிரமம் அடைந்துள்ளனர். உடனே நகராட்சி ஆணையாளர் சுகந்தி தலைமையிலான பணியாளர்கள் பாலத்தில் அடைப்பு ஏற்பட்ட அமலைச் செடிகளை அப்புறப்படுத்தினர்.
ஆண்டுதோறும் மழை காலத்தில் அடைப்பு ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் பெரிய பள்ளிவாசல் அருகே நூறாண்டு பழமையான சீவலான் கால்வாய் பாலத்தை உடனடியாக அப்புறப்படுத்தி உயரமான பாலம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் இந்த பாலத்தில் அமலைச் செடிகள் அடைப்பதால் நீர்வழி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்வதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்த னர்.