உள்ளூர் செய்திகள்

நாளை நடைபெற இருந்த பாத்திர தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

Published On 2023-01-31 10:56 GMT   |   Update On 2023-01-31 10:56 GMT
  • தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்து அறிவித்தன.
  • பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை அழைத்து பேசி சுமூகமான முறையில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரி உத்தரவாதம் அளித்தார்.

திருப்பூர் :

திருப்பூர் அனுப்பர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் உள்ளன. பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த மாதம் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது.

எவர்சில்வர் பாத்திர வகைகளுக்கு 50 சதவீதம், பித்தளை, தாமிரம், வார்ப்பு வகைகளுக்கு 60 சதவீதம், ஈயப்பூச்சுக்கு 70 சதவீதம் கூலி உயர்வு கேட்பது என முடிவு செய்யப்பட்டு எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. இந்தநிலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நியாயமான கூலி உயர்வு வழங்க முன்வர வேண்டும். கூலி உயர்வு வழங்காதபட்சத்தில் நாளை (புதன்கிழமை) முதல் அனுப்பர்பாளையம் வட்டாரததில் உள்ள பாத்திரபட்டறைகளில் பணிகளை நிறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும், தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்து அறிவித்தன.

இதைத்தொடர்ந்து நேற்று கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் செந்தில்குமார், அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் அனைத்து தொழிற்–சங்க கூட்டு கமிட்டியின் சார்பில் ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.), தேவராஜ் (ஏ.டி.பி.), ரத்தினசாமி (எல்.பி.எப்.), செல்வராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), பாண்டியராஜ் (எச்.எம்.எஸ்.), அசோக் (ஐ.என்.டி.யு.சி.), அர்ஜூணன் (காமாட்சியம்மன் பாத்திர சங்கம்), சீனிவாசன் (பி.எம்.எஸ்.) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை அழைத்து பேசி சுமூகமான முறையில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரி உத்தரவாதம் அளித்தார். மேலும் நாளை (1-ந் தேதி) நடக்க இருந்த வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைக்கவும் கேட்டுக்கொண்டார்.

வடக்கு சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார், தொழிற்சங்க கூட்டுக்கமிட்டியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இன்று தொழிற்சங்க கூட்டுக்கமிட்டியினர் திருப்பூர் கலெக்டரை சந்தித்து முறையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை நடக்க இருந்த அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஊர்வலத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் அறிவித்தனர்.

Tags:    

Similar News