அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய ஐ.டி.ஐ. மாணவர்கள்
- பஸ் பாஸ் இல்லாததால், பணம் கொ டுத்து டிக்கெட் பெற்றனர்.
- 10 பேர், கண்டக்டரை சூழ்ந்து அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ் நிலையத்திலிருந்து அத்திப்பள்ளி நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சில், நேற்று மாலை, ஓசூர் அரசு ஐ.டி.ஐ மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். இவர்கள், மூக்கண்டபள்ளி நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்கள் என தெரிகிறது. அவர்களிடம் பஸ் பாஸ் இல்லாததால், பணம் கொடுத்து டிக்கெட் பெற்றதாகவும், மேலும் இது தொடர்பாக கண்டக்டருக்கும், அந்த மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இந்த நிலையில், அந்த பஸ் மீண்டும் ஓசூர் பஸ் நிலையம் வந்தடைந்தது. அப்போது அங்கு காத்திருந்த ஐ.டி.ஐ. மாணவர்கள் 10 பேர், கண்டக்டரை சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். இதில் கண்டக்டர் படுகாயம் அடைந்தார். மேலும், தடுக்க வந்த டிரைவரும் தாக்கப்பட்டார். பின்னர், அவர்கள் இரு வரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், பஸ் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.