விக்கிரவாண்டி அருகே போலீசாரை தள்ளிவிட்டு சிறார் கைதி தப்பி ஓட்டம்
- 17 வயது இளம் சிறாரை மதுரையில் இருந்து செங்கல்பட்டிற்க்கு அழைத்து சென்றனர்.
- இளம் சிறார் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓட முயற்சித்தார்.
விழுப்புரம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதுடைய இளம் சிறார். இவர் மீது பழனி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் திருட்டு உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அவரை ேபாலீசார் கைது செய்தனர்.பின்னர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி 18 வயது பூர்த்தியாகும் வரை செங்கல்பட்டு இளம் சிறார் மையத்தில் வைத்து பாதுகாக்குமாறு உத்தரவிட்டார். இதனால் மதுரை இளம் சிறார் மையத்திலிருந்து செங்கல்பட்டு இளம் சிறார் மையத்திற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் போலீசார் கார்த்திக் ஆகியோர் நேற்று இரவு அரசு பஸ்சில் 17 வயது இளம் சிறாரை மதுரையில் இருந்து செங்கல்பட்டிற்க்கு அழைத்து சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தனியார் ஓட்டலில் அரசு பஸ் நின்றது. அப்போது பஸ்சில் இருந்து இருந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீஸ்காரர் கார்த்திக் 17 வயதுடைய இளம் சிறாருடன் சாப்பிட சென்றனர். பின்னர் சாப்பிட்டுவிட்டு ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது 17 வயதுடைய இளம் சிறார் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓட முயற்சித்தார். இதில் சுதாரித்துக் கொண்ட போலீசார் இளம் சிறாரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் இளம் சிறார் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். இரவு நேரம் என்பதால் இளம் சிறார் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விக்கிரவாண்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று தனியார் ஓட்டல் இருந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தப்பி ஓடிய இளம் சிறாரை வலைவீசி தேடி வருகின்றனர்.