உள்ளூர் செய்திகள்

திருச்சுழி அருகே கோவில் திருவிழாவில் `கமகம' கறி விருந்து

Published On 2024-06-23 04:33 GMT   |   Update On 2024-06-23 04:33 GMT
  • கறிவிருந்து பரிமாறும் அன்னதான நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
  • கறிவிருந்து நிகழ்ச்சியில் பெண்களுக்கு அனுமதியில்லை.

திருச்சுழி:

மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் என்றாலே கிடாய் வெட்டு, கறிவிருந்து மிகவும் பிரபலமானதாகும். குறிப்பாக கிராம கோவில்களில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு ஆண்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்குவதும் ஆங்கேங்கே அவ்வப்போது நடைபெறுவது வழக்கமாகும்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள தமிழ்ப்பாடி கிராமத்தில் ஸ்ரீ மந்தக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவை யொட்டி பொதுமக்கள் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது.

இதனையடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தப் பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய் களை தமிழ்ப்பாடி ஸ்ரீ மந்தக்குமார சுவாமிக்கு பலியிட்டு உணவாக சமைத்து காலை முதலே பக்தர்களுக்கு சுடச்சுட கிடாய் கறிவிருந்து பரிமாறும் அன்னதான நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த கறிவிருந்து நிகழ்ச்சியில் பெண்களுக்கு அனுமதியில்லை. வயதான பெண்கள், குழந்தைகள் இந்த கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உண்டு பசியாறி சென்றனர்.

Tags:    

Similar News