உள்ளூர் செய்திகள் (District)

காமநாயக்கன்பட்டி ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்தபடம்.

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய பெருவிழா கொடியேற்றம்

Published On 2022-08-07 08:28 GMT   |   Update On 2022-08-07 08:28 GMT
  • பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கொடியை ஆசீர்வதிக்க, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
  • கொடியேற்று விழாவையொட்டி, கோவில்பட்டி செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப் பட்டது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத்தின் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.

கொடியேற்றம்

வீரமாமுனிவர் பங்கு குருவாகப் பணியாற்றிய இந்த ஆலயத்தின் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி, நேற்று மாலை 6 மணிக்கு மிக்கேல் அதிதூதரின் திருவுருவப் பவனி நடந்தது.

தொடர்ந்து, 6.30 மணிக்கு கொடிமரம் நடப்பட்டது. பின்னர், கொடிமரத்தில் முதலாவதாக திருத்தலக் கொடியும், அதைத் தொடர்ந்து இறைமக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக் கொடிகள் அணிவகுப்பாகக் கட்டப்பட்டன.

பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கொடியை ஆசீர்வதிக்க, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வட்டார அதிபர் அருட்திரு சார்லஸ், பாளையங்கோட்டை புனித அந்தோணியார் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எஸ்.அந்தோணிசாமி ஆகியோர் திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்த்தினர்.

இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றம் நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று மாலை 5.30 மணி முதல் அசன விருந்து நடந்தது.

கொடியேற்று விழாவை யொட்டி, கோவில்பட்டி செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப் பட்டது. திருவிழாவின் 2-ம் திருநாளான இன்று காலை 8.30 மணிக்கு புதுநன்மை விழா, 8-ம் திருநாளான 13-ந்தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு, 9-ம் திருநாளான 14-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை மற்றும் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.

10-ம் திருநாளான 15-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் எஸ்.அந்தோணிசாமி தலைமையில் தேரடித் திருப்பலி நடைபெறும். அதைத் தொடர்ந்து, கும்பிடு சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அந்தோணி அ.குரூஸ், உதவி பங்குதந்தை ஜெனால்டு அ.ரீகன், மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி பகுதி இறைமக்கள் செய்து வருகின்றனர். காமநாயக்கன்பட்டி திருவிழாவையொட்டி, மாவட்ட காவல் எஸ்.பி, பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், கோவில்பட்டி டி.எஸ்.பி., வெங்கடேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News