வேகவதி ஆற்றின் கரையோரம் வீடுகள் இடிப்பு- தி.மு.க. கவுன்சிலரின் வீட்டு முன்பு பொது மக்கள் திடீர் போராட்டம்
- வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர்.
- 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக்கின் வீட்டை முற்றுகையிட்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி வழியாக வேகவதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையோரம் இரு புறங்களையும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். வேகவதி ஆற்றில் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற நிலையில் அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வழங்கப்பட்டு உள்ள வீடுகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வேகவதி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் தாயார் குளம் உள்ள அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் வேகவதி ஆற்றை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து காலி செய்யாமல் உள்ள 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள் அகற்றப்படுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 32 மற்றும் 48 வது வார்டுக்கு உட்பட்ட மந்தவெளி, நாகலத்து மேடு, நாகலத்து தெரு போன்ற பகுதிகளில் ஜே.சி.பி. மூலம் வீட்டை இடிக்கும் பணிகள் தொடங்கி நடந்தது.
அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக்கின் வீட்டை முற்றுகையிட்டு வீடு இடிக்கும் பணியை தடுத்து நிறுத்த கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.