பூதப்பாண்டி அருகே அ.தி.மு.க. பிரமுகரை கத்தியால் குத்திய 2 பேர் கைது
- சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே ஈசாந்திமங்கலம் நாவல் காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). அ.தி.மு.க. பிரமுகர்.தோவாளை ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
தற்போது மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வின் பெர்னால்டு (35), பிரேம் (22), மனோசிங் (24) ஆகிய 3 பேரும் நாவல் காடு பகுதியில் இருந்து மது அருந்தினார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார்கள். கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றில் சரமாரியாக குத்தினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.அவரை சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் செல்வின் பெர்னால்டு, பிரேம், மனோசிங் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் செல்வின் பெர்னால்டு, பிரேம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தலைமறைவாக உள்ள மனோசிங்கை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள். மணிகண்டனை தாக்கி யதற்கான காரணம் என்ன என்பது குறித்து கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.