வடக்குதாமரைகுளத்தில் குடிசை வீட்டில் திடீர் தீவிபத்து
- 100 சதவீதம் கருகி உள்ள நிலையில் விபத்தில் சிக்கிய பெண் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது
- தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
வடக்கு தாமரை குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி ஷீலா (வயது 64). இவர்களது மகன் ஹரிகரன் (30). ஷீலாவும் அவரது மகன் ஹரிகரனும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தூங்கினார்கள்.அப்போது வீட்டில் விளக்கை பற்ற வைத்திருந்தனர். நள்ளிரவு திடீரென விளக்கு சரிந்து எதிர்பாராத விதமாக குடிசை வீட்டில் தீப்பிடித்தது.
தீவிபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்தது.அப்போது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஹரிகரன் கண் விழித்தார். தீ எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே ஓடினார். அதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமானது.
இந்த விபத்தில் அவரது தாயார் ஷீலா சிக்கி உடல் கருகினார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஷீலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஷீலாவின் உடல் 100 சதவீதம் கருகி உள்ள நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள் . இதுகுறித்து தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.