நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு சொகுசு காரில் ரேசன் அரிசி கடத்திய டிரைவர் கைது
- 500 கிலோ அரிசி பறிமுதல்
- பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் கிட்டங்கியில் போலீசார் ஒப்படைத்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் நாகர்கோவில் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமை யிலான குழுவினர் வெள்ளமடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தினார்.ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். போலீசார் காரை பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். சுமார் 10 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று தெரிசனம் கோப்பு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர்.
காரை சோதனை செய்த போது காரில் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. காரில் இருந்து 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், தேரேக்கால் புதூர் பகுதியைச் சேர்ந்த அன்சார் என்பது தெரியவந்தது.போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அன்சாரிடம் விசாரணை நடத்திய போது ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் கிட்டங்கியில் போலீசார் ஒப்படைத்தனர்.
ரேஷன் அரிசி கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.