குளச்சலில் மீன் வரத்து மீண்டும் தொடங்கியது
- வங்காள விரிகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் நேற்று முதல் பிப். 2-ந் தேதிவரை பலத்த காற்று வீசும்.
- குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல விழா வரும் 5-ந் தேதி நடக்கிறது.
கன்னியாகுமரி:
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.
விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும்.
கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து மீண்டும் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் வள்ளங்களில் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. கடல் நீரோட்டம் மாற்றம் காரணமாக வழக்கமாக கிடைக்கும் மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை.இதனால் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குளச்சல் கடல் பகுதியில் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் மீனவர்கள், வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் வங்காள விரிகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் நேற்று முதல் பிப். 2-ந் தேதிவரை பலத்த காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதனால் இந்த நாட்களில் ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரை உள்ள கடலோர கிராம விசைப்படகு, கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என குளச்சல் மீன் துறை மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் நடராஜன் அறிவுறுத்தி உள்ளார்.இதற்கிடையே குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல விழா வரும் 5-ந் தேதி நடக்கிறது.
இதனை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற குளச்சல் விசைப்படகுகள் கடந்த 2 நாட்களாக கரை திரும்பிய வண்ணம் உள்ளது.கரை திரும்பிய விசைப்படகுகள் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.இந்த படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை விற்பனை செய்ய நாள் ஒன்றுக்கு 20 விசைப்படகு களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
நேற்று விசைப்படகுகளி லிருந்து இறக்கப்பட்ட மீன்களில் சூரை, வெளா மீன்கள் அதிகமாக இருந்தன.அவற்றை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் எடுத்து கேட்டு வாங்கி சென்றனர்.நேற்று மீண்டும் மீன்வரத்து தொடங்கியதால் மீன்கள் வழக்கமான விலைக்கு விலை போனது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.