உள்ளூர் செய்திகள்

மருந்துவாழ் மலை 

கன்னியாகுமரி அருகே உள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் "மகாதீபம்"

Published On 2022-12-02 08:30 GMT   |   Update On 2022-12-02 08:30 GMT
  • கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி 6-ந்தேதி ஏற்றப்படுகிறது
  • சிறுவர்கள் இரவு நேரங்களில் சுக்குநாரி புல், தீப்பந்தங்கள் போன்றவைகளை கொளுத்தி விளையாடுவார்கள்.

கன்னியாகுமரி:

ஆண்டு தோறும் கார்த்திகைமாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அதே போல இந்த ஆண்டு கார்த்திகை மாதம்கிருத்திகை நட்சத்திரமான வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பகுதியில் அமைந்துஉள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் "மகாதீபம்" ஏற்றப்படுகிறது.

முன்னதாக மருந்துவாழ் மலையில் உள்ள பரமார்த்த லிங்க சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் அன்னதானமும் நடக்கிறது. பரம்பரை தர்மகர்த்தா மந்தாரம்புதூரை சேர்ந்த பெரியசாமி தேவர் குடும்பத்தினர் பரமார்த்தலிங்க சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துஉள்ளனர்.

முன்னதாக மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்துக்கான எண்ணெய் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் குடங்களில் காணிக்கையாக பெறப்பட்டு வருகிறது. அந்த எண்ணெய் குடங்கள் அனைத்தும் 6-ந்தேதி மதியம் பொற்றையடியில் அமைந்துஉள்ள ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவிலுக்கு எடுத்துவரப்படுகிறது.

பின்னர் அங்குஇருந்து மருந்துவாழ்மலை தெய்வீகப் பேரவை சார்பில் எண்ணெய் குடங்கள் மருந்துவாழ் மலைஉச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மாலை 6 மணிக்கு மருந்துவாழ் மலை உச்சியில் "மகா தீபம்" ஏற்றப்படுகிறது மருந்துவாழ்மலை உச்சியில் ஏற்றப்படும் இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் தெரியும்.

3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும். மருந்துவாழ் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகுவீடுகளில்உள்ள வாசல் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடுவார்கள்.

வீடுகள்தோறும் கொழுக்கட்டை, அப்பம், திரளி, போன்றவைகளை தயார்செய்து இறைவனுக்கு படைத்து வழிபட்டு பின்னர் உண்டு மகிழ்வார்கள். கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. சிறுவர்கள் இரவு நேரங்களில் சுக்குநாரி புல், டயர், தீப்பந்தங்கள் போன்றவைகளை கொளுத்தி விளையாடுவார்கள்.

Tags:    

Similar News