உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம் 

பொங்கல் விற்பனை சூடு பிடித்தது

Published On 2023-01-13 10:02 GMT   |   Update On 2023-01-13 10:02 GMT
  • காய்கறிகள் விலை கடும் உயர்வு
  • கத்திரிக்காய் கிலோ ரூ.110-க்கு விற்பனை

நாகர்கோவில்:

பொங்கல் பண்டிகை களை கட்டியுள்ள நிலையில் கடை வீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள்குலை பொருட்கள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இந்தநிலையில் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம்சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஓசூர், மேட்டுப்பாளையம், பெங்களூரு, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

தற்பொழுது காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கியதையடுத்து விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய் விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது. வெண்டைக்காய் ரூ.35-க்கு விற்கப்பட்ட வந்த நிலையில் தற்போது 2 மடங்கு உயர்ந்து ரூ.96-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இதேபோல் கத்திரிக்காய் விலை ரூ.110 ஆக உயர்ந்துள்ளது. வரிக்கத்தரிக்காய் ரூ.60-க்கு விற்கப்படுகிறது. பீன்ஸ் விலை கடந்த 2 நாட்களாக ரூ.50 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. தடியங்காய், வெள்ளரிக்காய்களின் வரத்து அடியோடு குறைந்ததையடுத்து விலை உயர்ந்துள்ளது.

தடியங்காய் கிலோ ரூ.36 வெள்ளரிக்காய் ரூ.56-க்கு விற்கப்பட்டது. முருங்கைக்காய் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் முருங்கைக்காய் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.180-க்கு விற்கப்பட்டது. பல்லாரி ரூ.36, இஞ்சி ரூ.76, சேனை ரூ. 46, வழுதலங்காய் ரூ.56, பச்சை மிளகாய் ரூ.70, கேரட் ரூ.66, முட்டைகோஸ் ரூ.36, பீட்ரூட் ரூ.50, காலிபிளவர் ரூ.56, உருளைக்கிழங்கு மேட்டுப்பாளையம் ரூ.70-க்கு விற்கப்பட்டது.தக்காளி விலையை பொறுத்தமட்டில் கடந்த சில நாட்களாகவே ஒரு கிேலா ரூ.33-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் , வழக்கமாக பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறி விலை உயர்ந்திருக்கும். அதேபோல் இந்த ஆண்டும் காய்கறிகளின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.காய்கறி வரத்து குறைவே இதற்கு காரணமாகும். ஏற்கனவே குமரி மாவட்டத்தில் இருந்து வெள்ளரிக்காய், கத்தரிக்காய் போன்ற காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.தற்பொழுது விவசாயிகள் எண்ணிக்கை குறைந்ததையடுத்து உள்ளூர் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது என்றார்.

Tags:    

Similar News