கன்னியாகுமரி வாவத்துறையில் இயற்கை சீற்றத்தினால் சேதமடைந்த கடல் அரிப்பு தடுப்பு சுவர்
- விஜய்வசந்த் எம்.பி. பார்வையிட்டார்
- நிதி ஒதுக்கி 4 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை பணி தொடங்கப்படவில்லை.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி வா வத்துறை புனித ஆரோக்கி யநாதர் ஆலயத்தின் கிழக்கு பக்கம் கடற்கரையில் அமைந்துள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர் கடல் சீற்றத்தினால் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடித்தொழிலை பாதுகாப்பான முறையில் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.
அது மட்டும் இன்றி இந்த கடல் அரிப்பு தடுப்பு சுவரில் நின்றபடி சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து வரும் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. எனவே கடல் அரிப்பினால் சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என்று அரசுக்கு கன்னியாகுமரி வாவத்துறை தூய ஆரோக்கியநாதர் ஆலய பங்குபேரவையினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் பயனாக வாவத்துறை கடற்கரையில் கடல் அரிப்பினால் சேதமடைந்த தடுப்பு சுவரை ரூ.91 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மறுசீரமைப்பு செய்ய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த சேதமடைந்த கடல் அரிப்பு தடுப்பு சுவரை மறுசீரமைப்பு செய்ய நிதி ஒதுக்கி 4 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை பணி தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் கடல் சீற்றத்தினால் சேதம் அடைந்த வாவத்துறை கடல் அரிப்பு தடுப்புச்சுவரை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வாவத்துறை புனித ஆரோக்கியநாதர் ஆலய பங்குத்தந்தை லிகோரியஸ், பங்குபேரவை துணை தலைவர் வர்கீஸ் மற்றும் பங்குப்பேரவை நிர்வாகிகள் வாவத்துறையில் கடல் அரிப்பினால் சேதம் அடைந்த தடுப்பு சுவரை உடனடியாக கட்டி தரும்படி விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவைப்பெற்று கொண்ட விஜய்வசந்த் எம்.பி. வாவத்துறையில் கடல் அரிப்பினால் சேதம் அடைந்த தடுப்பு சுவரை மறுசீரமைத்து கட்டித்தர உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் உறுதி அளித்தார்.
ஆய்வின்போது குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் தாமஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ்,உள்பட பலர் கலந்துகொண்டனர்.