1 முதல் 5-ம் வகுப்புகள் வரை இன்று திறப்பு
- பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்
- ரோஜாப்பூ கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்
நாகர்கோவில் :
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று 1 முதல் முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டது.
குமரி மாவட்டத்திலும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என 554 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. கோடை விடு முறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து மாணவ-மாணவிகள் காலையிலேயே பள்ளிகளுக்கு புறப்பட்டு வந்தனர்.
பெரும்பாலான மாணவ-மாணவிகளை, அவர்களது பெற்றோர் இரு சக்கர வாகனங்களில் அழைத்து வந்தனர். அவர்களது கை பிடித்து குழந்தைகள் அழகுற நடந்து வந்தனர். சில மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் வந்தனர். முதல் நாளான இன்று மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர். 1-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளை பெற்றோர் முதல் நாளான இன்று பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தனர்.
முதல் வகுப்பிற்கு வரும் தங்கையை, அவரது சகோதரிகள் கையைப் பிடித்து பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தது பரவசம் ஊட்டியது. நாகர்கோவில் கவிமணி பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை, ஆசிரியர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் மாணவ-மாணவிகளை அவர்கள் வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர். இதே போல் நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளி உள்பட அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ-மாணவிகளை வரவேற்று வகுப்பறைகளுக்கு அழைத்து சென்றனர்.
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்த அவர்கள் உற்சாகமாக வகுப்பறைகளுக்கு சென்றனர். அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை இன்றே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து நாகர்கோவில் நகரப் பகுதியில் காலை நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்கள் பரபரப்பாக காணப்பட்டது. இரணியல், மார்த்தாண்டம், குளச்சல், களியக்காவிளை உட்பட அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட் டது. மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சீருடையுடன் வந்திருந்தனர்.