கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 12 கி.மீ. தூர கடற்கரை பகுதிகளில் மரக்கன்றுகள்
- அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்
- உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி நடக்கிறது
நாகர்கோவில் :
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி பசுமை மாவட்டம் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் காடு வளர்ப்பை அதிகரிக்கவும், கடலோர கிராமங்களில் கடலரிப்புக்கு எதிரான இயற்கை அரணை உருவாக்கவும், மாவட்ட நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோரை கொண்டு ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நாளை (4-ந்தேதி) பிற்பகல் 3 மணி அளவில் தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, பூத்துறை காருண்யபுரம் கடற்கரை பகுதியில் 'வனமே நம் வளமே" என்ற தலைப்பில் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுமார் 12 கி.மீ. அளவில் பனைமர விதைகள் மற்றும் புன்னை, தென்னை, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் முகாம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
அதனைத்தொடர்ந்து அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடலோர பகுதிகளான கோவளம், மணக்குடி, பள்ளந்துறை, முட்டம், மிடாலம், இனயம் புத்தன்துறை, பைங்குளம், தூத்தூர், கணபதிபுரம், புத்தளம், குளச்சல், கொல்லங்கோடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் முகாம்கள் நடைபெறவுள்ளது.
இம்முகாம்களில் அனைத்து பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்று வதற்கான முன்னெடுப்பு பணிகளை மேற்கொள்ளு மாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.