குழித்துறை அருகே கனிமவளம் ஏற்றி சென்ற லாரி மோதியதில் 2 கார்கள் சேதம்
- வாகனங்களில் சில அனுமதியின்றி கனிம வளங்களை கடத்தி வருவதாக புகார்கள் உள்ளன.
- குழித்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படு கின்றன. அதிகபாரம் ஏற்றி செல்லும் இந்த வாகனங்களில் சில அனுமதியின்றி கனிம வளங்களை கடத்தி வருவதாக புகார்கள் உள்ளன.
இப்படி செல்லும் வாகனங்களால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் நடந்து வருகிறது. சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்துவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்தே வருகிறது. இந்த நிலையில் அதிகபாரத்துடன் கனிம வளம் ஏற்றிய ஒரு லாரி குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி குழித்துறை பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. சாலையில் சென்றவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். நிலைதடுமாறி ஓடிய லாரி, முன்னால் சென்ற 2 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 2 கார்களின் பின்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் குழித்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய கனிமவள லாரியை பறிமுதல் செய்து, மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கனிம வளங்களை லாரிகளில் அதிகபாரம் ஏற்றி செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதாகவும், அதிகபாரம் ஏற்றி செல்லும் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.