இரணியல் அருகே பெண் உள்பட 2 பேருக்கு அடி-உதை
- கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது தகராறு
- டீ கடை உரிமையாளர் மீது வழக்கு
கன்னியாகுமரி:
நாகர்கோவில் இடலாக்குடியை அடுத்த வட்டவிளையை சேர்ந்தவர் பசுபதி (வயது 37).
இவர் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த சுனில் மனைவி அருள்மேரி (38) என்பவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை பார்வதிபுரம் கிறிஸ்டோபர்காலனியை சேர்ந்த ராம்ஜித் என்பவருக்கு கடனாக வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. ராம்ஜித் சுங்கான்கடை அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.
இதில் ரூ.53 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்த ராம்ஜித் ரூ.47 ஆயிரத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுபற்றி பசுபதி மற்றும் அருள்மேரி இருவரும் சேர்ந்து சுங்கான்கடை டீக்கடையில் இருந்த ராம்ஜித்திடம் பணத்தை திருப்பி கேட்டு உள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் அருள்மேரியை கையால் தாக்கிய ராம்ஜித், பசுபதியை டீ போடும் ஜக்கால் தலையில் தாக்கி யுள்ளார். இதில் காயமடைந்த பசுபதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாகவும், அருள்மேரி வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பசுபதி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் ராம்ஜித் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.