தக்கலையில் கனிம வள கடத்தலை தடுக்க தவறிய 2 போலீசார் இடமாற்றம்
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை
- அஜாக்கிரதையாக இருந்ததால் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிவளங்கள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தக்கலைப் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது நெல்லையிலிருந்து தக்கலை வழியாக அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அந்த வாகனத்தை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு புகார் வந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இப்புகார் தொடர்பாக அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் வாகன சோதனையின் போது போலீசார் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனத்தை கவனிக்காமல் விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த 2 போலீசாரை உடனடியாக ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.