உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் 2 டன் குட்கா கடத்தி வந்த கார் டிரைவர் கைது

Published On 2022-06-13 09:15 GMT   |   Update On 2022-06-13 09:15 GMT
  • காரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 டன் குட்கா 701 பொட்டலங்களாக இருந்தது கண்டுபிடிப்பு
  • சொகுசு கார் மற்றும் ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

கன்னியாகுமரி :

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா பூத்தாம்பூர் அருகே உள்ள தென்னங்கோடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது34).

இவர் தற்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி ரோட்டில் உள்ள குரும்ப பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். பகுதி நேர கார் ஓட்டுனரான இவர், கன்னியாகுமரி போலீஸ் நிலையம் வந்து, தொழில் போட்டியில் தன்னை 6 பேர் இங்கு கடத்தி வந்து லாட்ஜில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் தான் தற்போது தப்பி வந்த தாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாய்லட்சுமி, சப்-இன்ஸ் பெக்டர் ஹரிகுமார் மற்றும் போலீசார் கன்னியாகுமரி யில் உள்ள குறிப்பிட்ட விடுதியில் சோதனை நடத்தி னர்.

அப்போது அங்கு ஒரு அறையில் ஆயுதங்களுடன் 6 பேர் தங்கி இருந்தது தெரிய வந்தது. போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பி ஒடிவிட, மற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நாங்குநேரி கோதைசேரி ஜெகஜீவன்ராம் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (வயது 23), மாஞ்சங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (28), ஸ்ரீவைகுண்டம் தெற்கு காரசேரி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (22), வடக்குதெருவை சேர்ந்த முத்துக்குமார் (21) என தெரிய வந்தது.

அவர்கள் வந்த சொகுசு கார் மற்றும் ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து டிரைவர் ஆறுமுகம் கடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பெங்களூருவைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்குச் சொந்தமான தடை செய்யப்பட்ட குட்காவை ஆறுமுகம் காரில் தமிழகத்திற்கு கடத்தி வந்துள்ளார். இதனை அறிந்த மற்றொரு கும்பல் தான் அவரை ஆள் வைத்து கடத்தி உள்ளனர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் 4 வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு அருகே நேதாஜி காலனி பகுதியில் குட்காவுடன் கார் நிற்பதும் தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று காரை கைப்பற்றி சோதனை செய்தனர்.

காரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 டன் குட்கா 701 பொட்டலங்களாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் குட்கா கடத்தி வந்ததாக டிரைவர் ஆறுமுகத்தை (வயது 34) கைது செய்தனர்.

அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பொருட்கள் என்று கூறி கலப்படம் செய்து லாபம் கருதி விற்பனை செய்யும் நோக்கில் செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

Tags:    

Similar News