உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்த 2 வாலிபர்கள் கைது

Published On 2023-05-02 07:18 GMT   |   Update On 2023-05-02 07:18 GMT
  • பெட்ரோல் இல்லாததால் தீ வைத்ததாக வாக்குமூலம்
  • போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (வயது 35). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். கடந்த 6-ந்தேதி இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து கிடந்தது. இதுகுறித்து ஹரிஹரசுதன் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் ஹரிஹரன்சுதன் மோட்டார் சைக்கிள் எரித்தது வாகையடி தெருவை சேர்ந்த தாணு மூர்த்தி (21), மீனாட்சி செட்டிதெருவை சேர்ந்த ராம்கி (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்திய போது பைக்குக்கு பெட்ரோல் இல்லாததால் ஹரிஹரசுதன் மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை எடுக்க முயன்றோம். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லை. இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பெட்ரோல் இல்லாத மோட்டார் சைக்கிள் எதற்கு என்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தோம் என்று கூறினார்கள். கைது செய்யப்பட்ட தாணுமூர்த்தி, ராம்கி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News