உள்ளூர் செய்திகள்

ராஜாக்கமங்கலத்தில் வாகன சோதனையில் சிக்கிய 3 மோட்டார் சைக்கிள் திருடர்கள் சிறையில் அடைப்பு

Published On 2022-09-22 07:02 GMT   |   Update On 2022-09-22 08:01 GMT
  • மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்
  • 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி :

ராஜாக்கமங்கலம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் கீழ கோணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் அவர்களை ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்திய போது, அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த தனபால் (வயது 19) சேதுபதியூரைச் சேர்ந்த ஹரிராம் (19), ராமன்புதூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது.

அவர்களிடம் கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு ராஜா, ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் வடக்குகோணம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ரியாஸ் ( 20) என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 3 பேரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News