மணவாளக்குறிச்சி அருகே கோவில் பந்தலில் பனை மரம் விழுந்து 4 பேர் படுகாயம்
- சமபந்திக்காக போடப்பட்டி ருந்த பந்தலுக்குள் ஊர்மக்கள் 15 பேர் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தனர்.
- பந்தல் அருகே நின்ற சுமார் 40 அடி உயர பனை மரம் ஒன்று முறிந்து பந்தல் மீது விழுந்தது.
கன்னியாகுமரி :
மணவாளக்குறிச்சி அருகே வெள்ளிமலை பேரூராட்சி வண்ணான் விளையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வரு கிறது. நேற்று மண்டல பூஜையின் 46-வது நாளாகும். இதனை முன்னிட்டு கோவில் அருகே சமபந்திக்காக போடப்பட்டி ருந்த பந்தலுக்குள் ஊர்மக்கள் 15 பேர் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தனர். மதியம் வேளையில் அப்பகுதியில் பலத்த காற்று வீசியது.
அப்போது பந்தல் அருகே நின்ற சுமார் 40 அடி உயர பனை மரம் ஒன்று முறிந்து பந்தல் மீது விழுந்தது. பனை மரத்தின் மூட்டுப்பகுதி முறிந்து சரியும்போது லேசான சப்தம் கேட்டது. சப்தம் கேட்டு பந்தலுக்குள் காய்கறி நறுக்கிக் கொண்டி ருந்தவர்கள் பந்தலை விட்டு வெளியே ஓடினர். அதற்குள் பனைமரம் முறிந்து பந்தல் மீது விழுந்து விட்டது.
இதில் தகரத்திலான பந்தல் கூரை சரிந்தது. தகர இடிபாடில் அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் பெருமாள் (40), ஓய்வு பெற்ற அரசு விரைவு பேருந்து கழக மெக்கானிக் திரவியம் (61), தொழிலதிபர் ராஜ பிரபு (34) மற்றும் கூலித்தொழிலாளி தங்கப்பன் (74) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த 4 பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
மேலும் இந்த சம்பவத்தில் பந்தலில் போடப்பட்டிருந்த 14 மேஜை, 52 நாற்காலிகள் மற்றும் 6 டியூப் லைட்டுகள் உடைந்து சேதமானது.
தகவல் அறிந்ததும் வெள்ளிமலை பேரூராட்சி தலைவர் பாலசுப்ரமணியன், பேரூராட்சி ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மணவாளக்குறிச்சி போலீசார் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டனர். வண்ணான்விளை கோவில் பந்தல் மீது பனைமரம் முறிந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.