ரூ.6.4 கோடியில் மாத்தூர் தொட்டிப்பாலம், சிற்றாறு அணையில் மேம்பாட்டு பணி
- அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
- சிற்றாறு 2 அணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அதிநவீன புதிய படகுதளம்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்து வதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்படுமென முதல்-அமைச்சர் தெரிவித்தார்.
குறிப்பாக சிற்றாறு 2 அணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அதிநவீன புதிய படகுதளம் அமைக்க வேண்டுமெனவும், மாத்தூர் தொட்டிப் பாலத்தை சுற்றி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டுமெனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நான் கோரிக்கை வைத்தேன். இக்கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என வும், அதற்கான வரைவு திட்டத்தை தயாரிக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் சென்னை தலைமைச் செயலகத்தில் என்னுடைய தலைமையில், சிற்றாறு 2 நீர்த்தேக்க பகுதியில் ரூ.3.4 கோடி மதிப்பிலும், மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பிலும் மேற்கொள்ளப்பட இருக்கும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடை பெற்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (நீர்வளத்துறை), சந்தீப் சக்சேனா, சுற்றுலா துறையின் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, கன்னியாகுமரி மாவட்டட அரசு அலுவலர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.