குழித்துறை சந்திப்பு பகுதியில் சாலையில் உருவான திடீர் பள்ளம்
- பொதுமக்கள் அச்சம்-போக்குவரத்து பாதிப்பு
- சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
களியக்காவிளை :
நாகர்கோவில்-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் குழித்துறை சந்திப்பு பகுதி போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இந்த சாலையில் நேற்று இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் சற்று நேரத்தில் 10 அடி ஆழமாக மாற அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திடீரென ஏற்பட்ட பள்ளம் அந்தப் பகுதி மக்களை அச்சத்திற் குள்ளாக்கியது.
அவர்கள் அந்த வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கபட்டது. சாலையின் இரு புறமும் வாகனங்கள் நின்றதால் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொது மக்களும், இளைஞர்களும் சேர்ந்து போக்குவரத்தை சரி செய்ய முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
எனவே களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு வேலிகள் அமைத்தனர்.
சாலை பணி நடைபெற்று சில மாதங்களே ஆன நிலையில் சாலையின் நடுவில் 10 அடி பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.