உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை மலர் முழுக்கு விழா

Published On 2023-08-10 07:26 GMT   |   Update On 2023-08-10 07:26 GMT
  • 11.30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
  • 16 வகையான மலர்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலர் முழுக்கு விழா நடைபெற்றது.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரிஅருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டுக்கான ஆடி கிருத்திகை விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நிர்மல்ய தரிசனமும் 6.15 மணிக்கு கணபதி ஹோமமும் நடந்தது. பின்னர் 7 மணிக்கு அபிஷேகமும். 8.30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது.

அதன் பின்னர் 9.30 மணிக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள் பொடி, சந்தனம், விபூதி, நெய், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதன் பின்னர் 11.30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு துளசி, பச்சை, சம்பங்கி, தாமரை, அரளி, சிவந்தி, ரோஸ், மல்லி, பிச்சி, கொழுந்து, ரோஸ் உள்ளிட்ட 16 வகையான மலர்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலர் முழுக்கு விழா நடைபெற்றது.

பின்னர் அலங்கார தீபாராதனையும், விசேஷ பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News