விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் கூடுதல் படகு தளம்
- தூர்வாரும் கப்பல் மூலம் மணல் அகற்றும் பணி
- இன்று காலை தொடங்கியது
கன்னியாகுமரி :
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றம், நீர்மட்டம் தாழ்வு, உயர்வு, உள்வாங்குதல் போன்ற இயற்கை மாற்றங்களினால் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையினால் ஆன கூண்டுப்பாலம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த கண்ணாடி இழை கூண்டுப்பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது பக்கவாட்டிலும், நடை பாதையின் கீழேயும் கண்ணாடி வழியாக கடல் அலையை ரசிக்க முடியும். இந்த நிலையில், இந்த பணிகள் ஜனவரி 2024-ல் நிறைவுபெறும் என்று நெடுஞ்சாலைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு கடல் சார் வாரியம் விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பீட்டில் சிறப்பு மிக்க நவீன கடல் சார் பாதசாரிகள் பாலத்தை மத்திய அரசின் 50 சதவீத நிதி உதவியுடன் சாகர் மாலா திட்டத்தின் கீழ் மேற்கொண்டு வருகிறது.
இதில் முதல் கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. ஜனவரி 2024-ல் பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணாடி பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இதில் தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு இந்த பணியை தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில் கண்ணாடி பாலம் அமைப்பதற்கான மூலப்பொருட்கள் ஏற்றி செல்லும் கப்பல் போன்ற அமைப்பு கொண்ட மெர்ஜி என்னும் படகு கடந்த மாதம் 21-ந்தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படகு விவேகானந்தர் மண்டபத்தில் கூடுதல் படகு தளம் அமைப்பதற்காக படகு தளத்தை ஆழப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணிக்கான கிரேனை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை விவேகானந்தர் பாறையின் அருகில் கடல் நடுவே தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை விவேகானந்தர் பாதையில் படகு நிறுத்தும் தளத்தில் தூர்வாரி கப்பல் மூலம் மணலை அகற்றி ஆழப்படுத்தும் பணி தொடங்கியது.