நாகர்கோவிலில் காண்டிராக்டர் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு
- காண்ட்ராக்டர் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- வடசேரி போலீசார் காண்ட்ராக்டர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பார்வதிபுரம் அப்துல்கலாம் காலணி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 44) காண்ட்ராக்டர்.இவர் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இவர் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பார்வதிபுரம் அப்துல் கலாம் காலனி பகுதியை சேர்ந்தவர் மெர்சி சுரேஷ் (வயது 64) ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் வடசேரி போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது மகளுக்கு அண்ணா பல்கலை கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஜெயக்குமார் கூறினார்.இதை நம்பி அவரிடம் ரூ.21 லட்சம் பணம் கொடுத்தேன். மேலும் 63 பவுன் நகையையும் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் இழுத்தடிப்பு செய்து வந்தார்.
இதனால் நான் கொடுத்த பணத்தையும் நகையையும் திருப்பி கேட்டேன். இதுவரையில் ரூ.16 லட்சம் பணத்தை கொடுத்தார். மீதமுள்ள ரூ.5 லட்சம் பணம், மற்றும் 63 பவுன் நகையை பலமுறை கேட்டும் தரவில்லை.
இந்த நிலையில் என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து எங்களது சி.சி.டி.வி. கேமராவை சேதப்படுத்தியதுடன் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி சென்று உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக வடசேரி போலீசார் ஜெயக்குமார் மீது மோசடி வழக்கு உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ெஜயக்குமார் மீது ஏற்கனவே ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.