உள்ளூர் செய்திகள் (District)

குமரி மாவட்டத்தில் காங்கிரசார் 3 இடங்களில் மறியல்

Published On 2022-08-05 08:02 GMT   |   Update On 2022-08-05 10:10 GMT
  • எம்.எல்.ஏ.க்கள் உள்பட 540 பேர் கைது
  • விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நடந்தது

நாகர்கோவில்:

விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் 3 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள இந்தியன் வங்கி முன் மாநகர காங்கிரஸ் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராபர்ட் புரூஸ், மாநில போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர் அருள் சபீதா, நிர்வாகிகள் சகாய பிரவீன், சேவியர், ஜான் சவுந்தர், பொன் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை யில் அமர்ந்து மறி யல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடு பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். டி.எஸ்.பி. நவீன்குமார் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ள மோடி சந்திப்பில் மறியல் போராட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் கே. டி.உதயம் தலைமை தாங்கினார். பிரின்ஸ் எம்.எல்.ஏ. மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். வட்டாரத் தலைவர்கள் டென்னிசன், ஜெய்சிங், முருகேசன், வைகுண்டதாஸ், அசோக் ராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பிரின்ஸ் எம்.எல்.ஏ. உட்பட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறை சந்திப்பில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் மத்திய மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டு கொண்டிருந்த ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. உள்பட காங்கிரஸ் கட்சியினர் 220 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர். அதேபோல் நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் மணவளக்குறிச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட காங்கிரஸ் கட்சியினர் 220 பேரை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தே.மு.தி.க. மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ஐடன் சோனி தலைமையில் தே.மு.தி.க.வினர் வாழை மரத்தை கையில் பிடித்தவாறு கோஷத்துடன் உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தே.மு.தி.க.வினர் தேசிய நெடுஞ்சாலையில் வாழை நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் 80 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர்.

Tags:    

Similar News