இரணியலில் என்ஜினீயர் தற்கொலை - கல்விக்கடனை கட்ட வங்கி நோட்டீசு அனுப்பியதால் விபரீத முடிவு
- சென்னையில் இருந்து ஊருக்கு வந்தவர் தூக்கில் தொங்கினார்
- பூஜை அறைக்குள் சென்று அங்கிருந்த சாமி படங்களையும் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
இரணியல் :
இரணியல் மேலத்தெரு மெயின்ரோடு ஆமத்தன் பொத்தை பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 64). இவர் குளச்சல் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. பொறுப்பாளராக உள்ளார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (56). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உண்டு. மகள் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். மகன் கணேஷ்ராஜா (28). எம்.இ. பட்டதாரி. சென்னையில் தனியார் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் இரணியல் கிளையில் உள்ள ஒரு தேசிய வங்கியில் ரூ.2.5 லட்சம் கல்விக்கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த கடனை கட்டி முடிக்காததால் கணேஷ்ராஜா பெயருக்கு இலவச சட்ட மையத்தில் இருந்து அழைப்பாணை ஒன்று வந்துள்ளது.
அதில் செப்டம்பர் 8-ந்தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு கணேஷ்ராஜாவை ஆஜராகும்படி கூறி இருந்தது. இதுகுறித்த தகவலை அவரது தாயார் ஜெயஸ்ரீ சென்னையில் பணிபுரிந்து வந்த கணேஷ்ராஜா வை செல்போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். இதனால் மனவருத்தம் அடைந்த கணேஷ்ராஜா நான் உயிரோடு இருக்க மாட்டேன் என செல்போனில் தாயாரிடம் கூறி அழுததாக தெரிகிறது. 8-ந்தேதி ஆஜராக வேண்டியிருப்பதால் வீட்டிற்கு வருமாறு தாயார் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்தார். கல்வி கடன் தள்ளுபடி ஆகும் என்று காத்திருந்தபோது பணம் செலுத்த வேண்டும் என்று கேட்டு வங்கி கடன் செலுத்த சட்ட உதவி மையம் அழைப்பு விடுத்த விரக்தியில் கணேஷ்ராஜா மிகுந்த மன வேதனையுடன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அப்போது அவர்கள் கடனை கட்டிவிடலாம் என்றும், இலவச சட்ட மையத்தில் ஆஜராகி விட்டு வரும்படியும் கூறியுள்ளனர். எனினும் மனவேதனையில் இருந்த கணேஷ்ராஜா எதையும் பொருட்படுத்தாமல் பூஜை அறைக்குள் சென்று அங்கிருந்த சாமி படங்களையும் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாடி அறைக்குள் சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டார்.
பெற்றோர்கள் கதவை தட்டியும் கணேஷ்ராஜா கதவை திறக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஏணி மூலம் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது கணேஷ்ராஜா தூக்குபோட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கணேஷ்ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உதயகுமார் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்ப திவு செய்த போலீசார் கணேஷ்ராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.