இறச்சகுளம் கோவில் விவகாரம் நாகர்.கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை
- வாகன பவனி நடைபெறுவதில் இரு தரப்பினார் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது
- நள்ளிரவு 12.30 மணிக்கு மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
நாகர்கோவில் :
இறச்சகுளம் ஸ்ரீ எருக்கலங்காவுடைய கண்டன் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
தற்பொழுது அங்கு திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் வாகன பவனி நடைபெறுவதில் இரு தரப்பினார் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைடுத்து அந்த வழியாக வந்த அரசு பஸ்களை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கோவில் விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரையும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. உறுதி அளித்தார்.
இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.